மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

எனக்குள் ஒருவன் நவம்பர் 28, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 2:54 பிற்பகல்

பிட்சாவையும் பர்கரையும்
சுவைக்கயிலும்
அம்மா வைக்கும்
க‌ருவாட்டுக் குழ‌ம்பை
நினைத்து
நா ஊறுகையில்;

அழுக்கு ஜீன்ஸை
ஆயிர‌ம் ரூபாய்க்கு
வாங்கிவிட்டு
ஆட்டோக்கார‌னிட‌ம்
ஐம்பது பைசாவுக்கு
சண்டையிகையில்;

சாலையோர‌
சல்வாரையும் மிடியையும்
ரசித்துவிட்டு
சகோதரிக்கு மட்டும்
சேலையை தேர்ந்தெடுக்கையில்;

அவ்வப்போது
எட்டிப்பார்த்து விடுகிறான்
மென்பொறியாளன்
போர்வைக்குள்ளிருக்கும்
கிராம‌த்தான்!

 

மனநிலை நவம்பர் 22, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 5:39 மு.பகல்

நீயும்
பாலைவ‌ன வானிலை
போல‌த்தான்.
சுட்டாலும்
மெய்க‌ருக‌ சுடுவாய்;
பொழிந்தாலும்
உயிர் நனைய பொழிவாய்.

 

தேவதை நவம்பர் 22, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 5:39 மு.பகல்

கதவு திறந்து
தேவதையாய் நீ
புகுந்துபோது தான்
அலுவலகம் கோவில் போன்றது
என்பதன்
பொருள் விளங்கிற்று.

 

க‌ட‌லை போட்டுப்பார் நவம்பர் 22, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 5:38 மு.பகல்

‘காதலித்துப்பார்’க்க சொன்னார் வைரமுத்து. கடலை போட்டுப்பார்த்தால் எப்படியிருக்கும்?

க‌ட‌லை போட்டுப்பார்

உன்னை நீயே
அழகாய் காண்பாய்;

பேச்சில் சுவை கூடும்
ரசனைகள் மாறும்

அவ‌ச‌ர‌மாய் ஆங்கில‌ம்
க‌ற்பாய்;
அக‌ராதி துணையுட‌ன்
அகதா கிறிஸ்டி படிப்பாய்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

*

இர‌வுக்கும் ப‌க‌லுக்கும்
வித்தியாச‌ம் ம‌றப்பாய்;

மனிதத் தனிமை
சுகமென்பாய்,
தொலைபேசி துணையில்
இன்புறுவாய்.

செல்பேசிச் சூட்டிலே
வார்த்தைகள் உருகும்
குறுந்த‌கவ‌ல் அனுப்பியே
க‌ட்டைவிர‌ல் தேயும்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

*

நாளின் நீள‌ம்
குறைவென்பாய்
பத்து நிமிட அலுவலும்
பளுவாய் படும்.

காத‌ல் பாட‌ல்க‌ள்
மட்டுமே இசையாகும்;
க‌விதை எழுத
புறப்ப‌டுவாய்.

ஆள் பாதி,
ஆடை பாதி;
மேன்மையான‌ நீதியென்று
மெனக்கெடுவாய்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

 

தேடல் நவம்பர் 22, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 5:38 மு.பகல்

தேடித் தவங்கிடக்கையில்
சிக்காது,
ஏதோ ஒரு
மௌன கணத்தில்
வந்தடைந்து வியப்பூட்டும்
கவிதையும்
காதலும்!