மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

கொலு அக்டோபர் 18, 2007

கோப்பு வகை: கவிதை — பிரேம்குமார் சண்முகமணி @ 9:39 மு.பகல்

நித்தமும் என் மனதில்
கொலுவீற்றிருக்கும்
அம்மன் நீ!

கொலுப்பொம்மைகள் எல்லாம்
ஓய்யாரமாக வீற்றிருக்கின்றன படிகளில்;
வருபவர்களோ உன்னையே
பார்த்திருக்கிறார்கள்

கொலு வைத்தால்
அம்பிகை வீட்டிற்கு வருவாள்
என்று நம்புகிறாள் அம்மா!
நீ வந்துப்போனதில் இருந்து நானும்…

கொலுப்பார்க்க வந்த
உனைப்பார்த்த பிரமிப்பில்
உறைந்து நிற்கிறேன்;
எத்தனைப் பெரிய பொம்மை
என வியக்கிறது
வந்திருக்கும் குழுந்தை ஒன்று

 

உரக்க சொன்னதில்லை நீ! அக்டோபர் 10, 2007

கோப்பு வகை: கவிதை — பிரேம்குமார் சண்முகமணி @ 6:53 மு.பகல்

பிறிதொரு நாளில் சேர்ந்தே படிக்கலாமென‌
பத்திரப்படுத்திய ஆட்டோகிராப் ஏட்டை
மெல்ல புரட்டுகிறேன் தனிமையில்

வழக்கமான வார்த்தைகளையும்
வாழ்த்துக்கவிதைகளையும் தாண்டி
புத்த‌கமெங்கும் இரைந்து
கிட‌க்கிற‌து ந‌ம் காதலின் நினைவுக‌ள்

ந‌ம் பொருத்த‌த்தை பாராட்டும் தோழ‌னின் மகிழ்வு
அடுத்த‌ ச‌ந்திப்பிற்கான‌ ச‌ந்த‌ர்ப்ப‌மாய்
ந‌ம் திருமண‌ம் அமையுமென நம்பிய க‌ன‌வுக‌ள்;
அத‌ற்கு வ‌ர‌முடியுமோ என்ற ச‌ந்தேக‌த்தில் அப்போதே
அழத்தொடங்கிய‌ தோழியின் புலம்பல்கள்……

காதலை காகிதத்தில் சொல்ல மறுத்துவிட்ட உன்னால்
ப‌க்க‌வாத்திய‌ங்க‌ள் ப‌ல‌மாக‌ இசைக்க‌யில்
பாட‌கி ம‌ட்டும் மௌன‌ம் காக்கும் இசைக்க‌ச்சேரியாய்
தானிருக்கிற‌து இந்த‌ புத்த‌க‌ம்

உண‌ர்வுக‌ளை எப்போதும் உர‌க்க‌ சொன்ன‌தில்லை நீ;
பிரிய‌த்தின் போதும்,
பிரிவின் போதும்

-
பிரேம்குமார் சண்முகமணி

*** இந்தக் கவிதை தங்கம் மாத இதழின் செப்டம்பர் பதிப்பில் வெளியானது