இது காதல் காலம் – 10 பெப்ரவரி 27, 2007
ஒன்றும் பூஜ்யமும் மட்டுமே
அறியுமென் கணிணி
உன்னையும்
நம் காதலையும்
மட்டுமே எழுதும்
என் கவிதைகள் போல!
இது காதல் காலம் – 9 பெப்ரவரி 20, 2007
மல்லியப்பூ முடியயில
மனசயும் முடிஞ்சுபுட்டே
சிக்கில்லா சடயோட
சிக்கிருச்சே மனசு
சீலயக் கட்டயிலே
சீவனயுங் கட்டிப்புட்டே
கலையாத சீலக்கட்டில்
கலையுதே மனசு
வளவி சிணுங்கயில
வயசும் சிணுங்குது
மாட்டுற வளவியூட
மாட்டுதே மனசு
சிக்குன மனச
சீராக்கி சேப்பியோ?
கலஞ்ச மனசோட
கலவரஞ் செய்வியோ?
மல்லுக்கு நிக்காம
சொல்லொன்னு சொல்லு
ஊரே கேக்க உரக்கவோ இல்ல
பக்கமா வந்து பய்யவோ.
இது காதல் காலம் – 8 பெப்ரவரி 13, 2007
காதலின் கையேட்டில்
நம் பெயர்கள்
அக்கம் பக்கத்தில் தான்
இருந்தனவாம் இத்தனை நாளும்.
சேர்த்தெழுதும் புணர்ச்சி விதி மட்டும்
இப்போது தான் கற்றதாம்
காதல் குழந்தை
இது காதல் காலம் – 7 பெப்ரவரி 13, 2007
முதலில் ரசிக்கவைத்து
கொஞ்சம் தொட்டு விளையாடி
மெல்ல உள்ளிழுத்து
பின் மொத்தமாய் மூழ்கடித்துவிடும்
கடல்போலவே காதலும்.
கடலுக்கேனும் மும்முறை கருணை
பிறக்குமாம்;
காதலுக்கு?
இது காதல் காலம் – 6 பெப்ரவரி 13, 2007
எத்தனை முயற்சித்தாலும்
உனக்காக ஒரு கவிதை முத்தை
தேடப்போய்
உன் நினைவுக்கடலில்
மூழ்கித்தான் போகிறேன்
ஒவ்வொரு முறையும்
இது காதல் காலம் – 5 பெப்ரவரி 10, 2007
எத்தனையோ
காதல் காலங்களைத் தாண்டியும்
புத்தம் புதிதாய் தான் தெரிகிறது
வானதியும்
நானுக்கெழுதும் கவிதையும்!
இது காதல் காலம் – 4 பெப்ரவரி 6, 2007
கண்டதுமே வந்தனையோ! கண்ணசைவில் வந்தனையோ!
கன்னியவள் நகைத்தஅக் கணத்தில்தான் வந்தனையோ!
கட்டழகில் கிறங்கிப்போய் கருத்தினில் வந்தனையோ!
கள்ளமற்ற கோதையுளம் கவர்ந்ததாலே வந்தனையோ!
காதருகே காரணந்தான் கதைத்திடுவாய் காதலே!
இது காதல் காலம் - 3 பெப்ரவரி 5, 2007
திசைகாட்டிகள்
நிறைந்த பாதைகளிலும்
தொலைந்து போகும் நான்,
மிகச்சரியாக பிரயாணித்து
உனை அடைந்தது
இந்த காதல் பயணத்தில்தான்!
இது காதல் காலம் – 2 பெப்ரவரி 2, 2007
ஒரு வழிக் கண்ணாடி
மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
என் காதல்;
ஆற்றாமை பூசிய பாதரசம்
அழிந்து உனக்கது
புலப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன் நான்!


