கண்ணாமூச்சி ஏனடா : என் பார்வையில் நவம்பர் 12, 2007
ராடன் நிறுவனம் & யுடிவி தயாரிப்பில், ப்ரியா.v இயக்கத்தில், சத்யராஜ், ராதிகா, ஸ்ரீப்ரியா, ப்ரித்விராஜ், சந்தியா நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்துள்ள திரைப்படம் ‘கண்ணாமூச்சி ஏனடா’
கதைச்சுருக்கம் : ப்ரித்விராஜ் சந்தியாவை மலேசியாவில் சந்திக்கிறார். காதலில் விழுகிறார். ப்ரித்வியின் ஐயர் மாமா ஜாதிவெறியில் இந்த காதலை எதிர்க்கிறார். இருவரும் இந்தியா வருகிறார்கள். இங்கே சந்தியாவின் அப்பா சத்யராஜீக்கு ப்ரித்வியை பிடிக்கவில்லை. இதனால் சண்டையிட்டு பிரியும் சத்யராஜ்-ராதிகா ஜோடியை ப்ரித்வி இணைத்து வைக்க சத்யராஜீம் ப்ரித்விராஜீம் சமாதானம் ஆக, நடுவில் சந்தியாவில் கொஞ்சம் பிகு பண்ண கடைசியில் இனிதே முடிகிறது ப்ரித்விராஜ்-சந்தியா ஜோடியின் திருமணம்
ப்ரித்விராஜ் : அவரின் முந்தைய படங்களில் பார்த்தது போலவே இதிலும் மனிதர் பேசுகிறார், பேசிகிறார்…. பேசிக்கொண்டே இருக்கிறார். பல இடங்களில் எரிச்சலும், சலிப்புமே மிஞ்சுகிறது. மத்தபடி அவருக்கு பெரிதாக படத்தில் செய்துவிட எதுவும் இருக்கவில்லை
சந்தியா : பொறியில் அடைப்பட்ட எலிக்குட்டிப் போல் கீச்சு கீச்சென்று கத்திக் கொண்டே திரிகிறார். பாவம், டப்பிங் பேசும் போது என்ன பிரச்சனையோ தெரியவில்லை? மத்தபடி சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.
சத்யராஜ் & ராதிகா : சத்யராஜ் ஒரு பொறுப்பான கோபமான காவல்துறையில் பணிபுரியும் அப்பாவாக வலம் வந்திருக்கிறார். ராதிகா ஒரு இயல்பான குடும்பத்தலைவியாக வந்து செல்கிறார். நடுவில் கொஞ்சம் பெண்ணியமும் பேசுகிறார்.
ஸ்ரீப்ரியா : ‘நட்புக்காக ஸ்ரீப்ரியா’, எனினும் அவர் வந்தவுடன் ஒரு தனி கலகலப்பு வந்துவிடுகிறது படத்தில். அவரும் சத்யராஜீம் அடிக்கும் லூட்டிகள் கலகலக்க வைக்கின்றன. ஸ்ரீப்ரியாவின் டைமிங் மற்றும் நகைச்சுவை உணர்வு பற்றிச்சொல்லவா வேண்டும்?
இசை : இசை ரொம்பவே சுமார் ரகம். ‘அன்று வந்தது அதே நிலா’ பாடலின் ரீமிக்ஸ் தவிர மனதில் எதுவும் நிற்கவில்லை. யுவன்ஷங்கர் ராஜாவிற்கு என்ன சிக்கலோ? மேலும் பாடல்களின் ஒளிப்பதிவு சுத்த மோசம். மணிரத்னத்தின் மாணவி பாடல்களை இப்படி எடுத்து தள்ளியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது வேதனையே மிஞ்சுகிறது. அனேகமாக பாடல்கள் எல்லாமே திரைக்கதையில் திணிக்கப்பட்டே இருக்கின்றன
ஒளிப்பதிவு : ரொம்பவே அழகான ஒளிப்பதிவு. கண்களை பதம் பார்க்காமல், மிக இயல்பாக இருக்கிறது. மலேசியக் காட்சிகள் பளபள என்றால் ஊட்டி காட்சிகளோ குளுகுளு ரகம்.
ப்ரியா.V : முதலில், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நல்ல படத்தைக் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் ப்ரியாவிற்கு. எங்கேயும் நெருடாமல், நல்ல ஓட்டத்தோடுக் கூடிய திரைக்கதை. ஆனால் அதே சமயம் இந்தக் கதையை இன்னும் கலகலப்பாகவும் அழகாகவும் கொடுத்திருக்கலாம். (ப்ரித்விராஜ் பேசுவது தான் கலகலப்பு என்றால், ஆள விடுங்க சாமி)
மணிரத்தினத்தின் மாணவி என்ற காரணத்தினாலும் ‘கண்ட நாள் முதல்’ படத்தின் இயக்குனர் என்பதாலும் ப்ரியாவிடம் கொஞ்சம் அதிகமாவே எதிர்ப்பார்க்கிறோமோ என்னவோ?
அப்புறம் ப்ரியா, படத்தின் பல காட்சிகள் GUESS WHO மற்றும் MEET THE PARENTS படங்களில் வந்துள்ளது போலவே இருக்கிறதாமே?
அப்புறம், கிளைமாக்ஸீக்காக காத்திராமல் எழுந்து வந்துவிடுவது உத்தமம். அப்படி ஒரு இழுவை………. எப்படியும் இது தான் நடக்கும் என்று தெரிந்த ஒரு முடிவை இத்தனை இழுத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது.
தினந்தோறும்… மே 18, 2007
சிண்டை பிய்த்துக்கொள்ளவைத்த
சிக்கலான புதிரின் விடை
சிக்கிவிட்ட சந்தோசம்
சுட்டெரித்தாலும்
முகத்திலரையும் சுத்தமான காற்று
வம்பலைகளை துரத்தும் காதோர
பண்பலை
மடியிலாடி காற்றிலாடி கருத்திலாடி
படபடக்கும் கவிதைத் தொகுப்பு
நாள் முடியும் வேலையிலும்
அக்கணந்தான் கூடுடைத்த பட்டாம்பூச்சிகளாய்
தெருவிலாடும் சிறார்கூட்டம்
அலுவல் சுமைகளின்
அலுப்பை காட்டாது
வாசலில் காத்திருக்கும் தாய்
புரண்டு படுத்தாலும் அருகில்வர
முரண்டு பிடிக்கும் தூக்கம்
அவசரமாய் எட்டிப்பார்க்கும்
அதீத சுகம்
ஏதோவொன்று மறக்கடித்துவிடும்
வீட்டிற்கு திரும்பும் வலிகொண்ட பிரயாணத்தை
ஒவ்வொரு நாளும்
இது காதல் காலம் – 4 பெப்ரவரி 6, 2007
கண்டதுமே வந்தனையோ! கண்ணசைவில் வந்தனையோ!
கன்னியவள் நகைத்தஅக் கணத்தில்தான் வந்தனையோ!
கட்டழகில் கிறங்கிப்போய் கருத்தினில் வந்தனையோ!
கள்ளமற்ற கோதையுளம் கவர்ந்ததாலே வந்தனையோ!
காதருகே காரணந்தான் கதைத்திடுவாய் காதலே!
இது காதல் காலம் - 3 பெப்ரவரி 5, 2007
திசைகாட்டிகள்
நிறைந்த பாதைகளிலும்
தொலைந்து போகும் நான்,
மிகச்சரியாக பிரயாணித்து
உனை அடைந்தது
இந்த காதல் பயணத்தில்தான்!
இது காதல் காலம் – 2 பெப்ரவரி 2, 2007
ஒரு வழிக் கண்ணாடி
மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
என் காதல்;
ஆற்றாமை பூசிய பாதரசம்
அழிந்து உனக்கது
புலப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன் நான்!
இது காதல் காலம் – 1 பெப்ரவரி 2, 2007
சாலை பாதுகாப்பு வாரத்தில்
முதல் கட்டமாக
உன் கல்லூரிக்கு முன்னே
‘ஜாக்கிரதை. தேவதை குறுக்கிடும்’
என குறியீடு வைக்க திட்டமிட்டுள்ளதாம் அரசு!
புலன்களின் ஏக்கம் டிசம்பர் 21, 2006
உன்னை காண்கையில்
கண்களில் ஒரு
மின்னல்.
முத்தமிடுகையில்
இதழ்களில் நல்ல
அமிழ்தத்தின் சுவை.
நினைக்கையில்
புத்தியில் சிறு
பரபரப்பு.
உன் மொழி கேட்டாலே
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
ஒரு சிலிர்ப்பு.
எனக்கு மட்டும் சக்தியிருந்தால்
புலன்களை எல்லாம் பெருக்கிக்கொள்வேன்
காதுகள் பெரிதாகி போகட்டும்;
உனது மொழி மட்டுமே கேட்கட்டும்.
கண்கள் நான்காய் பெருகட்டும்;
எங்கெங்கும் உன் காட்சியே தெரியட்டும்.
நினைவின் ஆற்றல் இன்னும் விரியட்டும்;
நினைவுகள் யாவும் உனதாகவே இருக்கட்டும்.
தமிழே
அன்றும் இன்றும் என்றென்றும்
என்னிதயம் உன்னையே காதலிக்கும்;
நீயல்லாது போனால்
என்றன் புத்தி பேதலிக்கும்!
சொல்லாமலே டிசம்பர் 13, 2006
தொடக்கமோ,முடிவோ;
ஏதோவொன்று
பிடிபடாததால்
மனதிலேயே தங்கிவிட்டன
பல கவிதைகளும்
சில காதல்களும்
- பிரேம்குமார்
இதயங்கள் டிசம்பர் 12, 2006
அரளிப்பூ மேனியாளின்
ஆர்ப்பாட்ட அழகாலே
அவசரமாய்க் காதலுற்றேன்
அவளிடமே முறையிட்டேன்
சேதி கேட்ட சிறுக்கி
ரொம்பத்தான் முறுக்கி
“அதெல்லாம் முடியாது – என்
அன்புனக்காய் வடியாது.”
அதரம் திரட்டினாள்
அதட்டி விரட்டினாள்
“நீயில்லாதென் வானம்
எங்ஙனம் விடியும்?
என் இளமைத்தவம்
எக்கணம் முடியும்?!”
புலம்பித் தவித்தேன்
புழுவெனத் துடித்தேன்
தையலோ யோசித்து
வழியொன்றை விளம்ப,
மையலோ அதற்கென்னை
மண்டையாட்ட வைத்தது
‘நாதா, நீ சென்றோடி
உனையீன்றெடுத்த உன்
மாதா மார்பிளந்து – அவள்
இதயம் கொணர்ந்து
பரிசாய்க் கொடுத்தால்
பரிசீலிக்கலாம்’
கேட்ட நொடியில்
நான் செத்திருக்க வேண்டும்
அல்லால் அக்கணமே
அவளுயிரை அத்திருக்க வேண்டும்
மதி கெட்ட நானோ
மனை தேடியோடினேன்
விதியோ சதியோ
மாதாவைக் கொன்றாடினேன்
இதயங் கையிலேந்தி
வாயிற்கதவு தாண்டுகையில்
அடிதப்பி விழுந்தேன்.
தாயினிதயம் அப்போதும்
துடிதுடித்து கேட்டது
‘மடியாடிய செல்வமே
பார்த்து செல்லடா
அடியேதும் இல்லையே,
பார்த்து சொல்லடா’
அன்னையின் அன்பை
அப்போது உணர்ந்தேன்;
மதியற்ற செயலெண்ணி
மனம் நோந்தொடிந்தேன்
- பிரேம்குமார்
***பழைய கதையொன்று கவிதை வடிவத்தில்


