மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

இப்ப‌டிக்கு ந‌ட்பு – 1 ஆகஸ்ட் 14, 2007

கோப்பு வகை: நட்பு — பிரேம்குமார் சண்முகமணி @ 10:15 மு.பகல்

க‌வ‌ர்ந்திழுக்கும் ஆளையெல்லாம்
காத‌லித்துவிட‌ முடிவ‌தில்லை;
அவ்வ‌கையில்
ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌து ந‌ட்பு!

 

காத‌லென‌ப்ப‌டுவ‌து…. ஜூலை 17, 2007

கோப்பு வகை: கவிதை — பிரேம்குமார் சண்முகமணி @ 7:22 மு.பகல்

காதல் களவு;
கற்றதும் மறந்தது
மற்றவைய‌னைத்தும்!

காதல் விடம்;
அவ்விடத்தை முறிக்கும் விடம்
கிடைக்காமலேயே போகட்டும்.

காதல் ஆயுள் தண்டனை;
மிச்சமிருக்கும் சென்மங்களையும்
இப்போதே வாழ்ந்துவிடும்
ஏற்பாடுகள் உண்டா?

காதல் மாயை;
ரசிக்கும் மனமோ குழந்தை
ஆராய்ந்து பார்க்க ஏது வசதி?

 

தினந்தோறும்… மே 18, 2007

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 6:52 மு.பகல்

சிண்டை பிய்த்துக்கொள்ள‌வைத்த‌
சிக்க‌லான‌ புதிரின் விடை
சிக்கிவிட்ட‌ ச‌ந்தோச‌ம்

சுட்டெரித்தாலும்
முகத்தில‌ரையும் சுத்த‌மான‌ காற்று

வம்பலைகளை துரத்தும் காதோர‌
பண்பலை

மடியிலாடி காற்றிலாடி க‌ருத்திலாடி
ப‌ட‌ப‌ட‌க்கும் க‌விதைத் தொகுப்பு

நாள் முடியும் வேலையிலும்
அக்க‌ண‌ந்தான் கூடுடைத்த‌ பட்டாம்பூச்சிக‌ளாய்
தெருவிலாடும் சிறார்கூட்ட‌ம்

அலுவ‌ல் சுமைக‌ளின்
அலுப்பை காட்டாது
வாச‌லில் காத்திருக்கும் தாய்

புர‌ண்டு ப‌டுத்தாலும் அருகில்வ‌ர‌
முர‌ண்டு பிடிக்கும் தூக்க‌ம்
அவ‌ச‌ர‌மாய் எட்டிப்பார்க்கும்
அதீத‌ சுகம்

ஏதோவொன்று மறக்கடித்துவிடும்
வீட்டிற்கு திரும்பும் வ‌லிகொண்ட‌ பிர‌யாணத்தை
ஒவ்வொரு நாளும்

 

சென்னை 600028 மே 3, 2007

கோப்பு வகை: Uncategorized — பிரேம்குமார் சண்முகமணி @ 6:37 மு.பகல்

சென்னை 600028
எங்க ஏரியா, உள்ளே வராதே

வாழ்க்கையில் எப்போதாவது ஸ்டிக் கிரிக்கெட் விளையாடியிருந்தால் நிச்சயம் உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.

காதல், அடிதடி, குத்துவெட்டு, பஞ்ச் டயலாக், ரத்தம் என்ற தமிழ் திரைப்படங்களின் சராசரி எல்லையை மீறி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் ஒரு இளைஞர் கூட்டத்தை பற்றிய படம் தான் இது. இளைஞர்கள் பற்றிய படம் என்றாலும் ஏற்கனவே வந்த சில படங்கள் போல் ஆபாசம் இல்லை என்பது ஒரு ஆறுதலான் விசயம்
ரேடியோ மிர்ச்சி சிவா, ப்ரேம்ஜி, ‘பகவதி’ ஜெய், அர்விந்த் சித்தார்தா , இயக்குனர் அகத்தியனின் மகள் என சில தெரிந்த முகங்களும் சில புதுமுகங்களும் சேர்ந்து வாழ்ந்திருக்கும் படத்தில் தெருக் கிரிக்கெட் தான் கதைக்களம்

படத்தில் காட்சிகள் பெரும்பாலும் இயல்பாகவே இருக்கின்றன‌. நகைச்சுவைக்கூட மிக இயல்பாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது நினைத்தாலும் சிரிக்க‌ வைக்கும் ந‌கைச்சுவைக‌ள் நிறைய‌ உண்டு ப‌ட‌த்தில்.

பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே பிரபலம் ஆகிவிட்டவை. அருமையாக படம்பிடித்தும் இருக்கிறார்கள்.

பெரிதாம் மெஸேஜ் எதுவும் இல்லை. அதே ச‌மய‌ம் விர‌ச‌மில்லாம‌ல், நன்றாக‌ பொழுதுபோக‌க் கூடிய‌ ஒரு ப‌ட‌ம். ந‌ண்ப‌ர்க‌ளோடு பார்க்க‌ சிறந்த‌ ப‌ட‌ம்

ஒரு நல்ல படத்தை தந்தமைக்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும், தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கும் பாராட்டுகள்

சென்னை 600028
இந்த‌ ஏரியாவுக்கு எல்லாரும் ஒரு தபா விசிட் குடுக்க‌லாம்ப்பா

 

இது காதல் காலம் – 10 பெப்ரவரி 27, 2007

கோப்பு வகை: இது காதல் காலம் — பிரேம்குமார் சண்முகமணி @ 5:00 மு.பகல்

ஒன்றும் பூஜ்யமும் மட்டுமே
அறியுமென் கணிணி
உன்னையும்
நம் காதலையும்
மட்டுமே எழுதும் 
என் கவிதைகள் போல!

 

இது காத‌ல் கால‌ம் – 9 பெப்ரவரி 20, 2007

கோப்பு வகை: இது காதல் காலம், கவிதை — பிரேம்குமார் சண்முகமணி @ 7:08 மு.பகல்

மல்லியப்பூ முடியயில‌
மனச‌யும் முடிஞ்சுபுட்டே
சிக்கில்லா சடயோட‌
சிக்கிருச்சே மனசு

சீலயக் கட்டயிலே
சீவனயுங் கட்டிப்புட்டே
க‌லையாத‌ சீல‌க்க‌ட்டில்
க‌லையுதே ம‌ன‌சு

வ‌ள‌வி சிணுங்க‌யில
வ‌ய‌சும் சிணுங்குது
மாட்டுற‌ வ‌ள‌வியூட‌
மாட்டுதே ம‌ன‌சு

சிக்குன மனச
சீராக்கி சேப்பியோ?
கலஞ்ச மனசோட‌
க‌ல‌வ‌ர‌ஞ் செய்வியோ?

மல்லுக்கு நிக்காம
சொல்லொன்னு சொல்லு
ஊரே கேக்க உரக்கவோ இல்ல‌
பக்கமா வந்து பய்யவோ.

 

இது காதல் காலம் – 8 பெப்ரவரி 13, 2007

கோப்பு வகை: இது காதல் காலம் — பிரேம்குமார் சண்முகமணி @ 7:43 மு.பகல்

காதலின் கையேட்டில்
நம் பெயர்கள்
அக்கம் பக்கத்தில் தான்
இருந்தன‌வாம் இத்தனை நாளும்.
சேர்த்தெழுதும் புணர்ச்சி விதி மட்டும்
இப்போது தான் கற்றதாம்
காதல் குழந்தை

 

இது காதல் காலம் – 7 பெப்ரவரி 13, 2007

கோப்பு வகை: இது காதல் காலம் — பிரேம்குமார் சண்முகமணி @ 7:43 மு.பகல்

முதலில் ரசிக்கவைத்து
கொஞ்சம் தொட்டு விளையாடி
மெல்ல உள்ளிழுத்து
பின் மொத்தமாய் மூழ்கடித்துவிடும்
கடல்போலவே காதலும்.
கடலுக்கேனும் மும்முறை கருணை
பிறக்குமாம்;
காதலுக்கு?

 

இது காதல் காலம் – 6 பெப்ரவரி 13, 2007

கோப்பு வகை: இது காதல் காலம் — பிரேம்குமார் சண்முகமணி @ 7:43 மு.பகல்

எத்தனை முயற்சித்தாலும்
உனக்காக ஒரு கவிதை முத்தை
தேடப்போய்
உன் நினைவுக்கடலில்
மூழ்கித்தான் போகிறேன்
ஒவ்வொரு முறையும்

 

இது காதல் காலம் – 5 பெப்ரவரி 10, 2007

கோப்பு வகை: இது காதல் காலம் — பிரேம்குமார் சண்முகமணி @ 12:35 பிற்பகல்

எத்தனையோ
காதல் காலங்களைத் தாண்டியும்
புத்தம் புதிதாய் தான் தெரிகிறது
வானதியும்
நானுக்கெழுதும் கவிதையும்!